sarve janah sukhino bhavantu

sarve janah sukhino bhavantu

கனவில் கிடைத்த உத்தரவு


காஞ்சி சங்கரமடத்தில்... மடத்து வாத்தியாராக இருந்து, மகா பெரியவருக்கு உண்டான கைங்கர்யங்களை மிகுந்த சிரத்தையுடன் செய்து வந்தவர் - மேச்சேரி பட்டு சாஸ்திரிகள். மெத்தப் படித்தவர்; காஞ்சி மகானை கண் கண்ட தெய்வமாகவே எண்ணி போற்றி வருபவர்! 
காஞ்சி மகான் இருந்தபோதே, அவரது ஜன்ம நட்சத்திரமான அனுஷ நாளில், சென்னை மேற்கு மாம்பலத்தில் வேத பாராயணம், பாதுகாபிஷேகம் என்று விமரிசையாகக் கொண்டாடினார் பட்டு சாஸ்திரிகள். இதற்காக தன் பாதுகைகளையும் 32 ரூபாயையும் கொடுத்து, அனுஷத்தைக் கொண்டாடுவதற்கு பட்டு சாஸ்திரிகளுக்கு ஆசிர்வாதம் செய்தார், மகா பெரியவர்! சாஸ்திரிகளின் இல்லத்தில்... பெரியவாளின் பாதுகைகளைக் கொண்டு, மாதந்தோறும் அனுஷ நட்சத்திர உற்ஸவம் நடைபெறும். மகா அனுஷ நட்சத்திர உற்ஸவம் மேற்கு மாம்பலம்- அயோத்தியா மண்டபத்தில் கொண்டாடப் படும். துவக்கத்தில் சொந்த செலவில், இந்த வைபவத்தை கொண்டாடி வந்தார் சாஸ்திரி கள். பின்னர், காஞ்சி மகானின் அருளுக்குப் பாத்திரமான அன்பர்கள் இவரது சேவைக்கு உதவினர்; உதவியும் வருகின்றனர். 
2001-ஆம் வருட மகா அனுஷ உற்ஸவம், அயோத்தியா மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது சுவாமிநாதன் (மகானின் பூர்வாஸ்ரமப் பெயர்...சுவாமிநாதன்) என்ற பக்தர், இரண்டு பித்தளை சொம்புகளை பட்டு சாஸ்திரிகளிடம் கொடுத்து, ''மகா ஸ்வாமிகளுக்குப் பஞ்ச லோக விக்கிரகம் வடித்து, உற்ஸவம் நடத்துங்கள்'' என்று கூறி விட்டு நகர்ந்தார். இதை மைக்கில் அறிவித்ததுடன், பித்தளை சொம்பு கொடுத்தவரை கௌரவிக்கும் விதமாக, 'சுவாமிநாதனை மேடைக்கு அழைக்கிறேன்' என மைக்கில் கூறினார் சாஸ்திரிகள். ஆனால், சுவாமிநாதன் வரவே இல்லை. எனவே, 'இது ஸ்வாமிகளின் விருப்பம் போலும்' என தீர்மானித்த அன்பர்கள், அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொருவரது வீட்டில் இருந்தும் சொம்பு மற்றும் பழைய பாத்திரங்களை கொண்டு வந்தனர். பஞ்ச லோக விக்கிரகம் வடிப்பதற்குத் தேவையான உலோகங்கள் வந்து சேர்ந்ததும், அவற்றை சுவாமிமலையில் உள்ள ஸ்தபதி ஒருவரிடம் வழங்கி, விக்கிரகம் வடிக்கும் பணியை ஒப்படைத்தார் பட்டு சாஸ்திரிகள். 
இதையடுத்து, பெரியவாளின் மகா ஜயந்தி நாள் நெருங்கும் வேளையில் (வைகாசி மாதம்), தான் வடித்த மகா பெரியவாளின் விக்கிரகத்துடன் பட்டு சாஸ்திரிகளின் இல்லத்துக்கு வந்தார் ஸ்தபதி. சாஸ்திரிகள் சொன்ன கால அவகாசத்துக்கு முன்னரே வேலையை முடித்திருந்தார் ஸ்தபதி. இதுகுறித்து மகிழ்ச்சியடைவதற்கு பதில் கவலைக்குள்ளானார் சாஸ்திரிகள். காரணம்? விக்கிரகம் வடிப்பதற்காக ஸ்தபதிக்கு முன்பணம் கொடுத்திருந் தார் சாஸ்திரிகள். இப்போது மீதத் தொகையான ஆறாயிரம் ரூபாயை ஸ்தபதிக்கு தர வேண்டும். ஆனால், சாஸ்திரிகளிடம் பணம் இல்லை. எனவே தயங்கியபடி, ''இப்ப பணம் இல்லையே...'' என்றார். உடனே ஸ்தபதி, ''பரவாயில்லீங்க. பணம் வந்ததும் கொடுங்க!'' என்று கூறிச் சென்றார்.
தன் உண்மையான பக்தன் கஷ்டப்படுவதைக் கண்டு காஞ்சி மகானுக்கு பொறுக்கவில்லை போலும்! 

கணேஷ்குமார் (கடம் விநாயக்ராமின் சகோதரரின் மாப்பிள்ளை) என்பவர், மகா பெரியவாளின் தீவிர பக்தர்; அப்போது அமெரிக்காவில் இருந்தார். ஒருநாள் இரவில்... இவரின் கனவில் தோன்றிய பெரியவாள், 'மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்கிட்ட ஆறாயிரம் ரூபாயை உடனே கொடுத்துடு' என்று கூறி மறைந்தார். சட்டென்று விழித்த கணேஷ்குமார், இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அசதியில் அப்படியே தூங்கிப் போனார். அப்போது எவரோ வந்து தன்னை தட்டி எழுப்புவது போல் உணர்ந்தார் கணேஷ் குமார். இதன் பிறகு, கனவு குறித்து யோசித்தவர், சென்னையில் உள்ள உறவினர் மூலம் பட்டு சாஸ்திரிகளிடம் ஆறாயிரம் ரூபாயை கொடுக்கும்படி தெரிவித்தார். மறுநாள்! பட்டு சாஸ்திரிகளிடம் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. கண்ணில் நீர் மல்க வாங்கிய சாஸ்திரிகள், உடனே பூஜை அறைக்கு ஓடிச் சென்று, மகா பெரியவாளின் திருவுருவப்படத்துக்கு முன் விழுந்து நமஸ்கரித்தார். ஸ்தபதிக்கு பணத்தை பட்டுவாடா செய்தார்; பஞ்ச லோக விக்கிரகத்தை பூஜிக்கலானார்! 
இந்த விக்கிரகத்தைக் கொண்டு, மாதந் தோறும் சாஸ்திரிகளின் இல்லத்திலும் மகா அனுஷ நாளில் அயோத்தியா மண்டபத்திலும் உற்ஸவ வழிபாடுகள் நடந்தேறும்.

No comments:

Post a Comment