இவ்வளவு தூரம் கேட்டதற்குப் பிரயோஜனமாக பிராம்மணர்கள் எல்லாரும் ஏதாவது ஒரு காரியம் வேதத்தை ரக்ஷிப்பதற்காகப் பண்ணவேண்டும். நித்தியம் பிரம்ம யக்ஞம் பண்ண வேண்டும். பஞ்ச மஹா யக்ஞங்களில் அது ஒன்று. இங்கே 'பிரம்ம' என்றால் வேதம் என்று அர்த்தம். அகண்ட தீபம் போல் மந்திர சக்தியானது நம்மிடம் அணையாதிருப்பதற்காக நாம் அதைச் செய்ய வேண்டும். நாம் அத்தியயனம் பண்ணவேண்டிய சாகையின் மஹரிஷி எவரோ அவருக்குத் தர்ப்பணம் பண்ணவேண்டும். பண்ணி விட்டு இரண்டு அக்ஷரமாவது வேத அத்யயனம் பண்ண வேணடும். அதுவும் முடியாவிட்டால், காயத்ரீ ஜபத்தையாவது விடாமல் செய்ய வேண்டும். காயத்ரீ வேதத்தின் ஸாரமானது. காயத்ரீயை உபதேசம் பண்ணிக் கொண்ட பின்பு தான், வேதாக்ஷர உச்சாரணம் செய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. அத்தகைய காயத்ரீயை ஸஹஸ்ராவிருத்தி (ஆயிரம் முறை ஜபிப்பது) தினந்தோறும் செய்யவேண்டும். கடைசி பக்ஷம் பத்தாவது பிரதி வேளையும் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரீ மந்திரம் சித்த சாந்திக்குக் காரணம். அதனுடைய தேவதை சூரியன். சூரியனுக்கு உரிய நாளாகிய ஞாயிற்றுக்கிழமை, இந்த காலத்தில் ¢எல்லோருக்கும் லீவு நாளாக இருக்கிறது. ஆகையால் அன்று மட்டுமாவது விடியற்காலம் 4-மணிக்கு எழுந்து எல்லாரும் ஸஹஸ்ராவிருத்தி காயத்ரி ஜபம் பண்ணவேண்டும். செய்தால் க்ஷேமம் உண்டாகும்.
புருஷஸ¨க்தம், ஸ்ரீ ஸ¨க்தம், ருத்ரம் முதலான வேத ஸ¨க்தங்களையாவது எல்லா பிராம்மணர்களும் கற்றுக் கொள்ள வேண்டும்.
இதெல்லாம் தற்போது உத்தியோகங்களில் இருக்கிற பிராம்மணர்களுக்குச் சொன்னது. இனிமேல் இவர்கள் பூராவாக அத்யயனம் பண்ணுவது கஷ்டமாதலால் அதமபக்ஷம் வேத சம்பந்தமாக இவ்வளவாவது செய்தாக வேண்டும் என்றேன். ஆனால், கஷ்டத்திலும் ஒன்றை எடுத்துக் கொண்டு முடித்தால்தான் பெருமை ஜாஸ்தி. அந்த விதத்தில் இவர்கள் என்ன கஷ்டமானாலும் பெரிதில்லை என்று, எத்தனையோ ஆயிரம் தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்திருக்கிற வேத வித்யையை ஸ்வீகாரம் பண்ணியே தீருவது என்ற பக்தியும் சிரத்தையும் வைத்து விட்டால், இப்போதிருந்தாவது அத்யயனத்தை ஆரம்பித்துச் சில வருஷங்களில் பூர்த்தி செய்துவிடலாம். மேலே மேலே ஆராய்ச்சி பண்ணி, ஐம்பது வயசு, அறுபது வயசு அப்புறங்கூடப் பல வருடங்கள் படித்து, உழைத்து பி.ஹெச். டி பட்டம் முதலானதுகளைப் பல யூனிவர்ஸிட்டிகளில் வாங்குகிறார்கள் இல்லையா?மனஸ் இருந்தால் எதுவும் செய்யலாம். வேதம் என்றால் என்னவென்றே தெரியாமலிருந்துவிட்டு, அப்புறம் ஒரு ஆவேசம் வந்து நாற்பது வயசுக்குமேல் அத்யயனம் பண்ணினவர்கள் இருக்கிறார்கள். நம் வேத ரக்ஷணத் திட்டங்களின் பொறுப்புள்ள office-bearer -களிலேயே இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனபடியால் சிரத்தையும் சங்கல்பமுந்தான் முக்கியம்.
வயதாகி உத்யோகத்துக்கு வந்துவிட்ட பிராம்மணர்களின் சொந்த விஷயம் எப்படிப் போனாலும், இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கெல்லாம் தப்பாமல் வேத அறிவைத் தர ஏற்பாடு செய்ய வேண்டும். அத்யயனம் பண்ணுவதற்கு விட முடியாவிட்டாலும் (இப்படி நானே விட்டுக் கொடுத்துச் சொல்வது தப்புத்தான். நான் கொஞ்சம் இளக்கிக் கொடுத்து விட்டால் பாக்கியும் பிசுபிசுவென்று போய்விடும். ஆனாலும், நான் பிடிவாதமாக ஒரு ஆக்ஞை போடுவதால் ஒன்றுமே நடக்காமல் போய்விடுமோ என்பதால், இப்படி விட்டுக் கொடுத்துச் சொல்ல வேண்டியதாகிறது) , தங்கள் பிள்ளைகளுக்கு எட்டாம் வயசில் உபநயனத்தைப் பண்ணி, அப்புறம் ஏழெட்டு வருஷமாவது ஸாயங்காலங்களில் ஒரு மணி நேரம் முக்யமான வேத பாகங்களைக் கற்றுக் கொடுக்க ட்யூஷன் வைக்க வேண்டும். ஒரிடத்தில் பல பிள்ளைகளைச் சேர்த்துக் கூட்டுறவு அடிப்படையில் (co-operative basis ) இதைச் செய்தால் செலவு குறையும். அதோடு ஏழைப் பசங்களும் கற்றுக்கொள்ள முடியும்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக, இன்றைக்கும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடக்கும் வேத பாடசாலைகள் மூடிப் போகாதபடியும், இவற்றில் மேலும் வித்யார்த்திகள் சேருமாறு பண்ணவேண்டும். வித்யார்த்திகளுக்கும் அத்யக்ஷகர் (வாத்தியார்) களுக்கும் கணிசமான திரவிய சகாயம் பண்ணினால்தான் இந்தக் காரியம் நடக்கும். முன்னமே சொன்னமாதிரி, பிராம்மணனுக்கு ரொம்பவும் ஜாஸ்தியாக லௌகிக சௌகரியங்களையும், தன வஸதியையும் தரக்கூடாதுதான் என்றாலும், நல்ல ஸம்பாத்தியம் தரக்கூடிய பல தொழில்கள் அவர்களை வசீகரிக்கிற தற்காலத்தில், சிலராவது இப்படிப் பூர்ணமாக வேதத்தைக் கற்றுக்கொண்டு பிற்பாடு சொல்லிக் கொடுப்பது என்ற பிராம்மண ஸ்வதரமத்தையே செய்ய வேண்டுமானால், அப்படிப்பட்டவர்கள் "இல்லை"என்று அழாத அளவுக்கு அவர்களுக்கு வஸதி பண்ணித் தரத்தான் வேண்டும். ஆதியில் இல்லாத அநேக புதுப்புது சௌகரியங்களும், சுக சாதனங்களும் வந்துவிட்ட இந்த நாளில், சிலரை மட்டும் பரம வைராகிகளாக இருந்து கொண்டு ஸ்வதர்மத்தைப் பண்ணுங்கள் என்று சொன்னால், வேதரக்ஷணம் என்பது நின்றே போய்விட வேண்டியதுதான். அதனால் வேதத்துக்கே தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் படியாகச் சிலரைப் பண்ணும்போது, அவர்களுக்கு நாம் நன்றாக சன்மானம் செய்து, திரவிய சகாயம் நிறையக் கொடுக்கத்தான் வேண்டும். அவர்களுக்கு 'லக்ஷரி'கூடாதாயினும்,மற்றத் தொழில்கள் அவர்களை இழுத்துக் கொள்ளாத அளவுக்கு ஸெளகர்யம் பண்ணித் தரத்தான் வேண்டும். இப்படியெல்லாம் செய்யத்தான் அநேக திட்டங்கள் நடத்தி வருகிறோம்.
No comments:
Post a Comment